வெண்டைக்காய்: ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து விவரம்

வெண்டைக்காய் அல்லது லேடிஸ் பிங்கர் (Lady’s Finger) என்பது நாம் விரும்பி உண்ணும் காய்கறிகளில் ஒன்றாகும்.

சுவை மட்டுமின்றி, இவை பல ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற்றுள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?

இந்தப் பதிவில் நாம் வெண்டைக்காயின் ஊட்டச்சத்து விவரம் மற்றும் அவற்றை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வெண்டைக்காய் நன்மைகள் - Ladys finger benefits

ஊட்டச்சத்து விவரம்:

வெண்டைக்காய் புரதம், நார்ச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

100 கிராம் வெண்டைக்காயில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன (1).

  • கலோரி: 33
  • புரதம்: 1.93 கிராம்
  • நார்ச்சத்து: 3.2 கிராம்
  • கொழுப்பு: 0.19 கிராம்
  • கால்சியம்: 82 மி. கிராம்
  • இரும்புச்சத்து: 0.62 மி. கிராம்
  • மெக்னீசியம்: 57 மி. கிராம்
  • பாஸ்பரஸ்: 61 மி. கிராம்
  • பொட்டாசியம்: 299 மி. கிராம்
  • சோடியம்: 7 மி. கிராம்
  • வைட்டமின் சி: 23 மி. கிராம்
  • வைட்டமின் பி1: 0.2 மி. கிராம்
  • வைட்டமின் பி2: 0.06 மி. கிராம்
  • வைட்டமின் பி-6: 0.215 மி. கிராம்
  • வைட்டமின் பி9: 60 மைக்ரோ கிராம்
  • பீட்டா-கரோட்டின்: 416 மைக்ரோ கிராம்

இங்கு வெண்டைக்காய் உண்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் நாம் பார்ப்போம்.

வெண்டைக்காய் உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1. உடல் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது

இந்த சக்தி நிறைந்த வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன. இவை உடலில் பித்தம் உருவாகாமல் தடுப்பதற்கும், உடல்  கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.

எனவே உடல் கொலஸ்ட்ராலை பராமரிக்க வெண்டைக்காய்  ஒரு இயற்கையான உணவு ஆகும் (2).

2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வெண்டைக்காயில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் ரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றன.

எனவே வெண்டைக்காயை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து வருவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் (3).

3. உங்கள் கண் பார்வையை மேம்படுத்தும்

வெண்டைக்காயில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் மிக அதிகமாக உள்ளன.

இவை இரண்டும் உங்கள் கண் பார்வையை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.

ஆனால் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கொழுப்பில் கரையக் கூடியவை (Fat-Soluble). அதாவது இவற்றை கொழுப்புச்சத்து சேர்த்து உண்ணும்போது எளிதில் நமது உடலால் உறிஞ்சப்படுகின்றன.

எனவே இவற்றை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து சமைப்பது நல்லது (4).

4. டைப்-2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது

வெண்டைக்காய் மிகக்குறைவான கிளைசெமிக் இன்டெஸ் கொண்டுள்ளது. எனவே அவை உங்கள் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது.

மேலும் வெண்டைக்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்துகள் சர்க்கரை அளவை மெதுவாக ரத்தத்தில் வெளியிடுகின்றன. எனவே வெண்டைக்காய் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது (5)..

5. செரிமான மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை தடுக்கும்

வெண்டைக்காய் ஒட்டும் தன்மையை எதிர்க்கும் பண்புகள் கொண்டவை. இதனால் உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நமது வயிற்றில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க வெண்டைக்காய் உதவுகிறது (6, 7).

எனவே வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்ப்பது, சுத்தமாக வயிற்றை பராமரித்து கொள்ளவும் பாக்டீரியாக்களில் இருந்து செரிமான மண்டலத்தை பாதுகாக்கவும் உதவும்.

6. உங்கள் குடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது

வெண்டைக்காயில் நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன. இந்த நார்ச்சத்துக்கள் குடல் இயக்கங்களுக்கு துணை புரிந்து செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

எனவே வெண்டைக்காயை உண்பது மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்.

மேலும், வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் ஏ உங்கள் குடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றது (8).

7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

வெண்டைக்காயில் வைட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் திசு வளர்ச்சியை பராமரிப்பதற்கும் உதவுகின்றது.

100 கிராம் வெண்டைக்காயில் தினசரி தேவையான அளவில் 27% வைட்டமின் சி உள்ளது. எனவே வெண்டைக்காயை வழக்கமாக உண்டு வருவது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

8. இரத்தம் மெலிந்து போவதை தடுக்க உதவும்

ரத்தம் மெலிந்து போவதினால் உங்களுக்கு காயம் ஏற்படும் பொழுது அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம். வெண்டைக்காயில் வைட்டமின் கே மிக அதிகமாக உள்ளது. இந்த விட்டமின் கே ரத்த உறைதலுக்கு மிக அத்தியாவசியமான  ஒன்றாகும் (9).

எனவே வெண்டைக்காயை உண்பது ஈறுகள் மற்றும் மூக்கில் ஏற்படும் ரத்தப் போக்கையும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்த உதவும்.

9. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

ஆரோக்கியமாக கர்ப்பத்தை பராமரிப்பதிலும், கரு வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும், ஃபோலேட் அல்லது, வைட்டமின் B9 முக்கிய பங்கு வகிக்கின்றது.

வெண்டைக்காயில் ஃபோலேட் மிக அதிகமாக உள்ளது (10, 11).

எனவே கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ள வெண்டைக்காயை உண்டு வருவது மிகவும் நல்லது.

10. உங்களை அழகாக வைத்திருக்க உதவும்

வெண்டைக்காயில் உங்கள் அழகை பராமரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மிக அதிகமாக உள்ளன.

எனவே வெண்டைக்காய் உங்கள் தோலை பளபளப்பாக வைப்பதற்கும் தலை முடியை பராமரிப்பதற்கும் உதவும்.

Like Us On Facebook

 
Exit mobile version