குதிரைவாலி (Barnyard Millet) உலகின் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு சிறுதானியம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது.
குதிரைவாலி பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்திலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்க்கும் தன்மை கொண்டவை.
இந்த வகையில் அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
ஊட்டச்சத்து உண்மைகள்:
குதிரைவாலியானது இரும்புச்சத்து, புரதம், மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.
100 கிராம் குதிரைவாலி கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (1).
- கலோரிகள் : 300 kcal
- கொழுப்பு : 3.6 கிராம்
- நார்ச்சத்து : 13.6 கிராம்
- புரதம் : 11 கிராம்
- கார்போஹைட்ரேட் : 55 கிராம்
- கால்சியம் : 22 மி.கி
- வைட்டமின் பி 1: 0.33 மி.கி
- இரும்புச்சத்து : 18.6 மி.கி
- வைட்டமின் பி 2 : 0.10 மி.கி
- வைட்டமின் பி 3 : 4.2 மி.கி
குதிரைவாலி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
குதிரைவாலி உண்பதால் கிடைக்கும் 6 உடல்நல நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.
1. நீரிழிவு நோய்க்கு நல்லது:
குதிரைவாலியில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது.
எனவே, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட இது சர்க்கரை நோய்க்கு அதிக பலன் தரும்.
குதிரைவாலியானது 41.7 என்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனவே, இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது (2).
மேலும், குதிரைவாலி நீரிழிவு நோயாளிகளின் கொழுப்பு அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது (3).
எனவே, நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக இந்த சிறுதானியங்களை உண்டு வருவது மிகவும் நல்லது (4).
2. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:
குதிரைவாலியில் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைய உள்ளன (5).
இவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும் பண்புகளை கொண்டுள்ளன.
மேலும், இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள், நீரிழிவு நோய், மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன (6).
3. இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது:
குதிரைவாலியில் கார்போஹைட்ரெட் மற்றும் கொழுப்பு குறைவாகவே உள்ளன.
100 கிராம் குதிரைவாலியில் வெறும் 3.6 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது.
இதனால், அன்றாட வாழ்க்கையில் குதிரைவாலி தொடர்ந்து உண்டு வருவதால் ஆரோக்கியமாக இதயத்தை வைத்துக் கொள்ளலாம்.
மேலும், இது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது (7).
எனவே, குதிரைவாலி உடல் எடையைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
4. மலச்சிக்கலை தணிக்க உதவுகிறது:
குதிரைவாலியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன (8).
இந்த நார்ச்சத்துக்கள் நம் உடலில் செரிமானம் ஆகாமல் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படுகின்றன.
இதன் விளைவாக, கழிவுப்பொருட்களின் செரிமானம் மற்றும் வெளியேற்றத்திற்கு அவை உதவுகின்றன.
எனவே, குதிரைவாலியை உண்டு வருவது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும்.
5. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்:
குதிரைவாலியில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் மிக அதிகமாக உள்ளன (9).
துத்தநாகம் மற்றும் இரும்பு இவை இரண்டும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியம் (10, 11).
எனவே, குதிரைவாலி உண்டு வருவதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி தொற்று நோய்களிலிருந்து விரைவாக விடுபடமுடியும்.
6. பசையம் இல்லாதது (Gluten-Free)
குளூட்டன் என்கிற பசையம் என்பது கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றில் காணப்படக் கூடிய ஒருவகை புரதம் ஆகும்.
குளூட்டன் ஒவ்வாமை நோய் கொண்டவர்களுக்கு இந்த குளூட்டன் நல்லது அல்ல.
குதிரைவாலி உட்பட அனைத்து சிறுதானியங்களிலும் குளூட்டன் இல்லை (12).
எனவே, குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு குதிரைவாலி ஒரு தகுந்த உணவாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இது பயிரிடப்பட்டாலும் பெரும்பாலானோர் இதை விரும்பி உண்பதில்லை.
எனவே, நம் உடலுக்கு எண்ணற்ற நன்மை அளிக்கும் இந்த குதிரைவாலி அரிசியை நாம் அன்றாட உணவில் உண்டு வருவது நம்மை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.