தினை அல்லது ஃபாக்ஸ்டைல் மில்லட் (Foxtail Millet) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற (அறிவியல் பெயர்: Setaria Italica) இவை ஒரு பிரபலமான சிறு தானியமாகும். இவை பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை.
தினைகளின் 6 சுவாரஸ்யமான ஆரோக்கிய நன்மைகள் இங்கே நாம் காண்போம்.
தினை ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits Of Foxtail Millet) :
1. ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது
தினைகளில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
ஊட்டச்சத்து விவரம்
3.5 அவுன்ஸ் (100 கிராம்) தினைகளில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன (1).
- கலோரி: 331
- கார்போஹைட்ரேட்: 60.9 கிராம் (தினசரி தேவையான மதிப்பில் 20%)
- கொழுப்பு: 4.3 கிராம் (7%)
- புரதம்: 12.3 கிராம் (22%)
- நார்ச்சத்து: 8 கிராம் (32%)
- இரும்புச்சத்து: 2.8 மிகி (16%)
- கால்சியம்: 31 மி.கி (3% )
- பொட்டாசியம்: 250 மி.கி (6%)
- துத்தநாகம்: 2.4 மிகி (21%)
- மெக்னீசியம்: 81 மி.கி (20%)
2. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது
குறைந்த கிளைசெமிக் குறியீட்டு (Glycemic Index) மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் தினை கொண்டுள்ளது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தினை ஒரு சிறந்த உணவாகும்.
மேலும், உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க தினைகள் உதவும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன (2).
எனவே, டைப்-2 நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் அரிசிக்குப் பதிலாக தினை அரிசி சாப்பிடுவது மிகவும் நல்லது (3, 4).
3. எடை இழப்புக்கு உதவுகிறது
உடல் பருமன் என்பது நம்மில் பலருக்கு ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை.
அதிக எடையுடன் இருப்பது நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
தினைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் மிக அதிகம். எனவே, கொழுப்பை குறைக்க மற்றும் தசைகளை பலப்படுத்த விரும்புவோருக்கு தினை ஒரு நல்ல உணவாகும்.
மேலும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு தினைகள் உதவும் என்பதை ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன (5).
4. மலச்சிக்கலை நீக்க உதவுகிறது
தினையில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. நார்ச்சத்து உங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை நீக்க உதவும்.
மேலும், நார்ச்சத்துக்கள் உண்பது இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவக்கூடும் (6).
5. உங்கள் மூளை செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது
தினையில் ஏராளமான பி வைட்டமின்கள் (B1, B2, B3 & B9) உள்ளன.
பி வைட்டமின்கள் உங்கள் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன மற்றும் உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன (7).
6. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தினைகளில் வைட்டமின் A, வைட்டமின் E, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன.
இந்த சத்துக்கள் அனைத்தும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இன்றியமையாதவை.
எனவே, தினைகளை உங்கள் வழக்கமான உணவில் சேர்ப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் (8).