ராகி அல்லது கேழ்வரகு (அறிவியல் பெயர்: Eleusine coracana) என்பது இந்தியர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை தானியம். இது கூழ், புட்டு, உப்புமா, சப்பாத்தி போன்ற பல உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப் படுகிறது.ராகி பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது.
ராகியில் உடல்நல நன்மைகளை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் அதிகம் உள்ளன.குறிப்பாக வெள்ளை ராகியில் பழுப்பு ராகியை விட அதிக அளவு சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன என ஆய்வுகள் கணடறிந்துள்ளன (1).
இங்கு ராகியின் 6 அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை நாம் காண்போம்.
ராகி (கேழ்வரகு) ஆரோக்கிய நன்மைகள் (Benefits Of Ragi)
1. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கால்சியம் நமது எலும்பு மற்றும் பற்களுக்கு இன்றியமையாத கனிமமாகும். FDAயின் படி , நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 1000 மி.கி கால்சியம் தேவைப்படுகிறது.
ராகி நிறைய கால்சியத்தைக் கொண்டுள்ளது. இது நமது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (2).
100 கிராம் கேழ்வரகில் தோராயமாக 344 மிகி கால்சியம் உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி தேவையான அளவில் (RDI) 35% ஆகும்.
2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
கேழ்வரகின் கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) பற்றிய தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
உங்கள் வழக்கமான உணவுகளில் தொடர்ச்சியாக ராகி சேர்க்கும் போது, அவற்றில் உள்ள அதிக நார்ச்சத்துகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன (3,4).
3. மலச்சிக்கலை போக்கும்
கேழ்வரகில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது.
100 கிராம் கேழ்வரகில் ஏறத்தாழ 3.6 கிராம் நார்ச்சத்துக்கள் (தினசரி தேவையான மதிப்பில் 15%) உள்ளன.
நார்ச்சத்து குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதுவுகிறது. மேலும், நார்ச்சத்துக்கள் உங்களை நீண்ட நேரம் பசியின்றி முழுமையாக வைத்திருப்பதால் கேழ்வரகு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
4. இரத்த சோகை வராமல் தடுக்கிறது
நமது சிவப்பணுக்களுக்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது.
இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படும். இது நமது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை தேவையான அளவை விட குறைவாக இருக்கும் நிலை ஆகும்.
கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது.
5. புரதச்சத்து நிறைந்தது
கேழ்வரகு புரதச்சத்து அதிகம் கொண்டவை.
100 கிராம் கேழ்வரகில் கிட்டத்தட்ட 7.3 கிராம் புரதம் (தினசரி தேவையான அளவில் 14.6%) உள்ளது.
புரதம் வளர்சிதை மாற்றத்தின் ஊக்கியாகவும் மற்றும் தசைகளை பலப்படுத்தவும் (Muscle Building) உதவுகிறது (5).
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கேழ்வரகு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பெற்றவை. மேலும், இதில் சிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் மிக அதிகமாக உள்ளது.
சிங்க் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் மற்றும் காயத்தை விரைவில் குணப்படுத்தவும் உதவுகிறது (6, 7).