கம்பு: ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகள்

- Advertisement -

கம்பு (Pearl Millet) இந்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலமான ஒரு தானியம் ஆகும். இது மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றியது (1).

ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இந்த கம்பு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

சப்பாத்தி, தோசை, போன்றவற்றை செய்ய கம்பு மாவை மக்கள் பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் இது பயன்படுகிறது.

ஊட்டச்சத்து உண்மைகள்:

கம்பு தானியத்தில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

100 கிராம் கம்பு பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (2).

  • கலோரி: 363 kcal
  • கொழுப்பு: 4.8 கிராம்
  • நார்ச்சத்து: 2.3 கிராம்
  • மொத்த கார்போஹைட்ரேட்: 67 கிராம்
  • புரதம்: 11.8 கிராம்
  • இரும்புச்சத்து: 11 மி.கி
  • வைட்டமின் பி 1: 0.38 மி.கி
  • கால்சியம்: 42 மி.கி
  • வைட்டமின் பி 2: 0.21 மி.கி
  • வைட்டமின் பி 3: 2.8 மி.கி

கம்பு நன்மைகள் - Benefits Of Pearl Millet In Tamil

கம்பு உண்பதால் கிடைக்கும் 6 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

- Advertisement -

கம்பு உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1. இதயத்திற்கு நல்லது

கம்பு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மெக்னேசியத்தை மிக அதிகமாக கொண்டுள்ளது (3).

மேலும், இதில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள் மற்றும் பினாலிக் அமிலங்களும் வளமாக நிறைந்துள்ளன. இவை இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களைத் தடுக்க உதவுகின்றன (4).

மேலும், ஆராய்ச்சியாளர்கள் பிராய்லர் கோழிகள் மீது நடத்திய ஆய்வில், கம்பு கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுகிறது என தெரிய வந்துள்ளது (5).

2. உடல் எடையைக் குறைக்க உதுவுகிறது

கம்பு கரையாத நார்ச்சத்துக்களை மிக அதிகமாக கொண்டுள்ளது. இந்த நார்ச்சத்து கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது (6).

கம்பு செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. எனவே, இது நீண்ட நேரத்திற்கு நம்மை பசியின்றி திருப்தியுடன் வைத்திருக்கும்.

மேலும், இது சக்தி மற்றும் புரதச்சத்து நிறைந்த நல்ல ஆதாரமாக விளங்குகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

3. நீரிழிவு நோய்க்கு நல்லது

கம்பு குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீட்டைக் (Glycemic Index) கொண்டுள்ளது (7). எனவே, அது உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளை உடனடியாக உயர்த்தாது.

மேலும், ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் மீது நடத்திய சோதனையில் கம்பு இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்க உதவுகிறது என தெரியவந்துள்ளது (8).

- Advertisement -

எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கம்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

4. புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது

கம்பு உள்ளிட்ட அனைத்து சிறுதானியங்களிலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் பாலிபினால்கள் போன்ற வேதிப்பொருள்கள் நல்ல அளவில் உள்ளன  (9).

மேலும், கம்பு போன்ற முழு தானியங்களை வழக்கமாக உண்டு வருவது மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன (10).

5. செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது

கம்பு நமது செரிமானத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்துக்களை மிக அதிக அளவில் கொண்டுள்ளது.

மேலும், நார்ச்சத்து நமது குடல் இயக்கங்களை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

6. பசையம் இல்லாதது (Gluten-free)

கம்பு பசையம் (குளுட்டன்) இல்லாத ஒரு உணவு. எனவே, இது குளுட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு உகந்தது.

பக்க விளைவுகள்:

சில நேரங்களில் கம்பு பூஞ்சை நோய்களால் பாதிக்கப் படலாம்.

இவ்வாறு பூஞ்சைகள் தாக்கப்பட்ட கம்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆல்கலாய்டுகளை கொண்டுள்ளது (11).

- Advertisement -

இவற்றை உட்கொள்வதால் குமட்டல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாம் (12).

முடிவு செய்தல்:

கம்பு ஒரு சிறந்த சத்தான தானியம். இது பல மருத்துவ பயன்களை நமக்கு அளிக்கிறது.

இவற்றைப் பயன்படுத்தி சப்பாத்தி ரொட்டி தோசை ஆகியவற்றை எளிதாக நாம் செய்யலாம். இவை கோதுமை மற்றும் அரிசியை விட ஆரோக்கியமானவை.

எனவே, நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க கம்பு தானியத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது அவசியம்.

- Advertisement -