கொத்தவரங்காய் (Cluster beans) அல்லது குவார் பீன்ஸ் (Guar beans) என்று அழைக்கப்படும் இவை பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிகமாக பயிரிடப்படுகிறது. உலகிலேயே இவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில், மக்கள் கொத்தவரங்காயை ஒரு பிரதான உணவாக பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக, பொரியல் தயாரிக்க மக்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர்.
அவற்றின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் குவார் கம் (Guar Gum) எனும் ஒரு வகையான பசை தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த குவார் கம் ஜவுளி, மருந்து மற்றும் உணவுத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது (1).
ஊட்டச்சத்து உண்மைகள்
மிகவும் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கொத்தவரங்காய் புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக கொண்டுள்ளது. வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.
கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
100 கிராம் கொத்தவரங்காய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (2):
- நீர்: 81 கிராம்
- கலோரிகள்: 16 கிலோ கலோரி
- புரதம்: 3.2 கிராம்
- கார்போஹைட்ரேட்: 10.8 கிராம்
- கொழுப்பு: 1.4 கிராம்
- கால்சியம்: 57 மி.கி (தினசரி மதிப்பில் 6%)
- இரும்புச்சத்து: 4.5 மி.கி (தினசரி மதிப்பில் 25%)
- வைட்டமின் ஏ: 65.31 IU (தினசரி மதிப்பில் 3%)
- வைட்டமின் சி: 49 மி.கி (தினசரி மதிப்பில் 55%)
கொத்தவரங்காய் நன்மைகள் (Cluster Beans Benefits):
1. இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்
கொத்தவரங்காயில் 100 கிராமுக்கு 1.4 கிராம் கொழுப்பு மட்டுமே இருப்பதால், அவை இதயத்திற்கு நல்லது.
மேலும், கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் (3).
கூடுதலாக, கொத்தவரங்காயை உண்பது மோசமான கொழுப்பு (LDL) அளவைக் குறைத்து உடலில் நல்ல கொழுப்பு (HDL) அளவை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது (4).
2. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்
கொத்தவரங்காயின் ஒரு முக்கிய அங்கம் அவற்றிலுள்ள ஏராளமான கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் (5).
கொத்தவரங்காயின் மற்றோரு நன்மை நீரிழிவு நோயாளிகளுக்கு என்னவென்றால் அவற்றின் குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடாகும் (Glycemic Index).
உண்மையில், சமீபத்திய ஆய்வில், கொத்தவரங்காயின் சர்க்கரை உயர்த்தல் குறியீடு வெள்ளை ரொட்டியை (White bread) விட 27.91% குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது (6).
இதனால் கொத்தவரங்காய் உண்பது உங்கள் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. எனவே, நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
3. எடை இழப்பை ஊக்குவிக்கலாம்
அதிக கார்போஹைடிரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை வேகமாக உயர்த்துவதால் உடல் எடையை அதிகரிக்கலாம் (7).
ஆரோக்கியமற்ற முறையில், உடனடியாக சக்தியை பெறுவதற்காக நாம் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை விரும்புகிறோம்.
கொத்தவரங்காய் நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது ஆரோக்கியமான சக்தியை இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாமல் நமக்கு அளிக்கிறது.
கூடுதலாக, எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கொத்தவரங்காய் உட்கொள்வது கொழுப்பு நம் உடலில் சேர்வதை குறைப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என காட்டுகிறது (8).
4. உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கொத்தவரங்காயில் நார்ச்சத்து மற்றும் நீர் நிறைந்திருப்பதால், அவை உங்கள் செரிமானத்திற்கு உதவுவதோடு உங்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மேலும், அவற்றின் விதைகளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடல் செரிமானத்திற்கு உதவும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது (9).
கூடுதலாக, கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) உங்களை வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும் (10).
5. பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவலாம்
கொத்தவரங்காயின் மற்றொரு குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அவற்றின் பித்தப்பை கற்களை கரைக்கும் திறன் ஆகும்.
உங்கள் பித்தத்தில் அதிக கொழுப்பு இருப்பது பித்தப்பை கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது (11).
எலிகள் மீது நடத்திய ஒரு ஆய்வில், கொத்தவரங்காய் பித்தத்தில் உள்ள கொழுப்பு அளவை திறம்பட குறைக்கிறது என தெரியவந்துள்ளது (12).
மற்றொரு ஆய்வில், 15% கொத்தவரங்காய் கொண்ட ஒரு உணவு எலிகளில் பித்தப்பை கற்கள் ஏற்படும் சம்பவங்களை 58 சதவீதம் குறைத்தது (13).
முடிவு செய்தல்
நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பித்தப்பைக் கற்கள் உள்ளிட்ட பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க கொத்தவரங்காய் உதவும் என வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே, இவ்வளவு அதிக சத்தான மற்றும் நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்ற கொத்தவரங்காயை அடிக்கடி நம் உணவில் சேர்த்து வருவது நல்லது.