மூலிகைகளின் ராணியாக விளங்கும் துளசி (Holy Basil), ஹிந்துக்களால் வழிபடப்படும் ஒரு மூலிகை. கோவில்கள் மற்றும் ஒவ்வொரு இந்து வீட்டு விசேஷத்திலும் இது பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.
துளசி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இது ஆயுர்வேதத்திலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துளசி உண்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
இங்கு துளசி உண்பதால் கிடைக்கும் 8 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் காணலாம்.
1. சுவாசப்பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது
நமக்கு சளி அல்லது ஜலதோஷம் ஏற்படும் போது பெரியோர்கள் நமக்கு துளசி கஷாயம் செய்து கொடுப்பார்கள்.
உண்மையில், துளசியானது சாதாரண சளி, இருமல் மட்டுமின்றி ஆஸ்துமா, தொண்டை வலி போன்ற அனைத்து சுவாச நோய்களுக்கும் ஒரு சிறந்த மூலிகையாகும்.
துளசியை தேநீருடன் கலந்து எடுத்துக் கொள்ளும் போது அல்லது வெந்நீருடன் கலந்து ஆவி பிடிக்கும் போது இது போன்ற அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் நீங்கும் (1).
2. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணிக்க உதவுகிறது
துளசி செடியின் அனைத்து பகுதிகளும் அடாப்டோஜன்கள் (Adaptogens) ஆகும்.
அடாப்டோஜன்கள் என்பது மனித உடலில் மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் மன சமநிலையை மேம்படுத்தவும் உதவும் இயற்கைப் பொருட்கள்.
மேலும், எந்தவிதமாக மன அழுத்தம் தோன்றினாலும் துளசி அதைக் குறைப்பதில் உதவுகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன (2).
எனவே மன அழுத்தத்தை குறைக்க துளசி ஒரு பக்க விளைவுகள் இல்லாத இயற்கையான நிவாரணி ஆகும்.
3. மூட்டு வலியை தணிக்க உதவுகிறது
துளசி அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகளைப் பெற்றுள்ளது.
இதனால், கீல்வாதத்தினால் (Arthritis) ஏற்படும் மூட்டு வலியை தணிக்க துளசி உதவும் என ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளன (3).
மேலும், சுவாச நோய்களை குணப்படுத்தவும் துளசியின் அழற்சி எதிர்ப்பு பண்புகளே காரணம்.
4. காயத்தைக் குணப்படுத்தும் குணங்கள்
துளசி காயங்களை குணப்படுத்தும் குணங்கள் கொண்டவை.
தொல்லைதரும் முகப்பருவிலிருந்து விடுபடவோ அல்லது விபத்தில் சிக்கிய தழும்புகளிலிருந்து மீள விரும்பினாலும் துளசி ஒரு சிறந்த மூலிகை.
இந்த மூலிகை பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் பண்புகள் கொண்டவை என்று அறியப்படுகிறது. மேலும், அதன் சாறு காயங்களை விரைவில் ஆற்றவும் உதவுகிறது (4).
5. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது
டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, துளசி செடியின் அனைத்து பாகங்களும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.
துளசியின் சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்கும் குணங்கள் நீரிழிவு நோயினால் ஏற்படும் பிற அறிகுறிகளையும் தடுக்க உதவுகின்றன.
மேலும், ஆராய்ச்சியாளர்கள் எலிகளில் நடத்திய ஆய்வில் துளசி இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்க உதவுவது தெரியவந்துள்ளது (5).
இருப்பினும், நீங்கள் ஏற்கனவே சர்க்கரை நோய்க்கான மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு துளசியை பயன்படுத்துங்கள்.
6. இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது
துளசி இலைகளை தொடர்ந்து உட்கொள்தல் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் (6).
நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது நம் உடல் கார்டிசோல் (Cortisol) எனும் ஹார்மோனை அதிகமாக சுரக்கிறது.
துளசி இலைகள் கார்டிசோல் ஹார்மோனை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
இதனால், துளசி உண்பது பக்கவாதம், மாரடைப்பு போன்ற அதிக ரத்த அழுத்தத்துடன் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தையும் குறைக்கவும் உதவும் (7).
இது மட்டுமின்றி, நம் உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைப்பதன் மூலம், உடல் எடையை பராமரிப்பதற்கும் துளசி உதவுகிறது.
7. வயிற்று புண்களுக்கு எதிராக செயல்படுகிறது
விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் (8), துளசி சாறு வயிற்றுப் புண்களுக்கு எதிராக செயல்படுகிறது என தெரிய வந்துள்ளது.
எனவே, துளசி வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கவும், வந்தால் அவற்றை விரைவில் குணப்படுத்தவும் உதவுகிறது.
8. மலேரியா நோயை எதிர்க்கும் பண்புகள் கொண்டுள்ளது
துளசி இலைகள் மலேரியாவை எதிர்க்கும் பண்புகள் கொண்டவை.
துளசி இலைகளில் பிளவனாய்டுகள், பீனால்கள், புரதங்கள் மற்றும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இந்த சேர்மங்கள் மலேரியா நோய்க்கு எதிராக செயல்படுகின்றன (9).
எனவே துளசி ஒரு கிருமி நாசினியாகவோ, மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவோ, இரத்த சர்க்கரை மேலாண்மைக்காகவோ அல்லது மலேரியா எதிர்ப்பு மருந்தாகவோ மட்டுமில்லாமல் பல வகைகளில் நன்மை அளிக்கிறது என அறிந்தோம்.