உளுந்து – 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

- Advertisement -

உளுத்தம் பருப்பு அல்லது உளுந்து (Black Gram) என்பது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து தோன்றிய ஒரு வகை பயிராகும். இது நாடு முழுவதும் உள்ள இந்தியர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.சுவை மட்டுமின்றி உளுந்து நன்மைகள் பல.

தென் இந்திய உணவுகளில் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான். உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.

உளுந்து குறித்து 7அற்புதமான ஆரோக்கிய பலன்களை தெரிந்து கொள்வோம் .

உளுந்து - 7 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

உளுந்து நன்மைகள்:

இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

உளுந்தில் பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் உளுந்தில் ஏறத்தாழ 983 மி.கி பொட்டாசியம் உள்ளது.

உப்பு (சோடியம்) உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை நீக்குவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க பொட்டாசியம் உதவுகிறது (1).

மலச்சிக்கலை நீக்கும்

உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் உளுந்தில் கிட்டத்தட்ட 18 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் மலச்சிக்கலை நீக்கவும் உதவுகிறது.

மேலும், உளுந்து உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. ஏனெனில், நார்ச்சத்துக்கள் உங்களை பசியின்றி நீண்ட நேரம் முழு திருப்தியுடன் வைத்திருக்கும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது

உளுந்து 43 என்ற மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, அவை உடனடியாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

- Advertisement -

மேலும், உளுந்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை வராமல் தடுக்கவும் உதவும் (2).

இரத்த சோகையை நீக்குகிறது

உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் உளுந்தம் பருப்பு கிட்டத்தட்ட 7.8 மி.கி இரும்புச்சத்து கொண்டுள்ளது.

எனவே, உங்கள் வழக்கமான உணவில் உளுத்தம் பருப்பு சேர்ப்பதால் இரத்த சோகை உங்களை விட்டு நீங்கும்.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் இன்றியமையாதவை.

100 கிராம் உளுந்தில் 267 மி.கி மெக்னீசியம் உள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட மதிப்பில் 75% ஆகும். எலும்பு முறிவுகளை தடுக்க மெக்னீசியம் உதவக்கூடும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மேலும், உளுத்தம் பருப்பில் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது (3, 4).

புரதச் சத்து நிறைந்தது

100 கிராம் உளுந்தில் 25.21 கிராம் புரதச்சத்து உள்ளது. இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட தேவையான அளவில் 50% ஆகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, வயிற்றுப்போக்கைக் குறைகிறது

உளுத்தம் பருப்பில் துத்தநாகம் (Zinc) நிறைந்துள்ளது. 100 கிராம் உளுந்தில் 3.35 மி.கி துத்தநாகம் (தினசரி மதிப்பில் 35%) உள்ளது.

- Advertisement -

துத்தநாகம் நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு ஒரு முக்கியமான கனிமமாகும். மேலும், துத்தநாகம் வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்கவும், காயத்தை விரைவாக குணப்படுத்தவும் உதவுகிறது (5).

எச்சரிக்கை:

உளுத்தம் பருப்பை அதிகமாக உட்கொள்வது நம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் (6).

எனவே, சிறுநீரக கற்கள் தொந்தரவு உள்ளவர்கள் உளுத்தம் பருப்பு உட்கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -